மேஷம்
அஸ்வினி: ராகு 3-ல் அமர்ந்திருப்பதால், நதிநீர்ப் பங்கீட்டில் மாநிலத்தில் இடையூறுகள் இருப்பதுபோல, உங்களுக்கும் சொந்த வாழ்வில் தண்ணீரால் பிரச்சினைகள் உருவாகலாம். வாகனம் வைத்திருப்போருக்கு செலவினம் மிகையாகும். "ஓம் மங்களேஷாய வித்மஹே சண்டிகா ப்ரியாய தீமஹி தந்நோ ஸம்ஹார பைரவ பிரசோதயாத்' என்னும் மந்திரத்தை உச்சரித்தல் நற்பலன் தரும். புதன்கிழமையில் ராகு பகவானை வணங்குதல் நன்று. பரணி: கேதுவும் சனியும் 9-ல் இருப்பதால், எதிலும் தீர்வு கிட்டுவதில் அதிக தாமதத்தை சந்திக்க நேரிடும். இம்மாதம் யாவரிடமும் உதட்டளவு பாசம் போதுமானது. தன்னிலை உணர்ந்த பேரறிவே பயன்தரும். மொட்டை மாடியில் எரிபொருள் சேமிப்பது கூடாது. தெற்கு நோக்கிய 8-ஆம் எண் வீட்டில் இருப்போருக்கு இது முக்கியமாகும். பெண்களுக்கு காதணியைவிட, தொங்கும் ஜிமிக்கி அணிவது நல்லது; இம்மாதம். கிருத்திகை முதல் பாதம்: 11-ல் சூரியன் புதனுடன் உள்ளார். எத்துறையில் இருப்போருக்கும் திருஷ்டி நிறைந்த மாதம் இது. ஆடம்பரம் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கும், பிறருக்கும் பதுக்கலில் பணப்புழக்கம் மிகையாகும்; உஷார் நிலை முக்கியம். வருமான வரி ஏய்ப்பு என்ற பொறியில் சிக்கநேரிடும். மாமன், மைத்துனர்களின் உதவி நல்லபாதை அமைக்கும். புதன்கிழமை பெருமாளையும், ஞாயிறன்று சூரியபகவானையும் மானசீகமாக வணங்கவும். எண்ணம் ஈடேறும்.
ரிஷபம்
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: நீண்டநாட் களாக திருமணம் தடைப் பட்டிருந்தால், நாள்பட்ட வேப்பமரத்தில் சிறு துளை யிட்டு, ஒரு முக்கோண வடிவிலான வெள்ளி உலோகத் துண்டை உள்ளே வைத்து பட்டையால் மூடிவிடவும். முன்னோர் செய்த பாவத்துக்கு விமோசனம் பெறலாம். பிரசாதம் போன்றவற்றை சாதுக் களிடம் வாங்குவதை இம்மாதம் தவிர்த்தால் தடைகள் அகன்று விடும். சிறுதுளி தங்கமாவது உடம்பில் இருப்பது நல்லது. குருவருள் பெறலாம். திருமணம் ஈடேறும். ரோகிணி: சுக்கிரன் இம்மாதம் உற்சாகத்தைத் தருவார். அரசு சாரா (என்.ஜி.ஓ.) பணிபுரிவோர் பிறர்பணிகளில் தலையிடுதல் கூடாது. "எனக்கு எப்போதுமே சரியான வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை' என்ற கவலை விடைகொடுக்கும். பெண் தலைமையில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு சரியான பாதை தெரியவரும். தங்க வியாபாரம், மது வியாபாரம், மணக்கும் திரவம் விற்போருக்கும் அதிக லாபம் தரும் மாதம். ஆண்கள் வெள்ளிக்கிழமைகளில் வெண்ணிற ஆடைக்கு முக்கியத்துவம் தருதல் நற்பலன் தரும். மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: கேதுவும் சனியும் 8-ல். 70 வயதைக் கடந்த பெரியவர்கள் இம்மாதம் விநாயகப் பெருமானை மானசீகமாக வணங்குதல் நன்று. மனைவியின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இரண்டு நிறம் கலந்த ஆடை அல்லது போர்வை தானம் செய்வது நல்லது. சனிக்கிழமை எட்டு பாதாம்பருப்பு, ஒரு கண்மைச் சிமிழை கறுப்புத்துணியால் முடிந்து, மேற்கு நோக்கி நின்று வழக்கமான திருஷ்டி சுற்றி குப்பைத் தொட்டியில் போடுவதால் தோஷம் விடைகொடுக்கும்.
மிதுனம்
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: 9-ல் சூரியனும் புதனும் கும்பத்தில் காட்சி தருகிறார்கள். அரசியலில் இருப்போர் தலைமை யின் கட்டுப்பாட்டைமீறி வார்த்தை களைப் பேசி வருந்தநேரிடும். 24 வயதுக்குமேல் 34 வயது வரையுள்ள மாணவர்கள் சுலப நன்மைகளைப் பெறலாம். குழந்தைகளின் கல்விக்கான செலவினங்களில் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு உருவாகும். கூறவேண்டிய மந்திரம்: அநவத்யாநேக ஹஸ்தாசநேக மாணிக்யபூஷணா/ அநேக விக்ன ஸம்ஹர்த்ரீ த்வ நேகாபரணாந்விதா// திருவாதிரை: பழைய வாகனங் களை வாங்கி சீர்செய்து விற்போர், கடல் வாணிபம் செய்வோர் லாபத்தை இரட்டிப்பாக்கலாம். 7-ல் சனி பகவான் இருப்பதால் இம்மாதம் இடமாற்றம், தொழில்மாற்றம் வேண்டாம். நெடுநாட்கள் குடும்பத்தில் வீண்வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்தால், ஒரு சிறிய மண்குடுவையில் தேனை நிரப்பி, ஈயப்பேப்பரால் மூடிக் கட்டியபின், அதனை வீட்டிற்கு வெளியில் தென்மேற்கு பாகத்தில் பள்ளம் தோண்டி அதில் வைத்து மண்ணால் மூடிவிடவும். எல்லா கெடுதல்களையும் வாஸ்துபகவான் போக்கிவிடுவார். புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: நிறைவேறாத ஆசைகள் விரக்தியை உண்டுபண்ணும். தாம்பத்தியத்தில் சுக்கிரன் எதிரிபோல் செயல்படுவார். சனியின் வீட்டில் இருப்பதால் சுக்கிரனைப் பேணவேண்டும். மோதிர விரலில் முத்து அல்லது வைரமோதிரம் அணிதல் நல்லது. தயிர், நெய், கற்பூரம் ஆகியவற்றை ஆலயங்களுக்குக் கொடுப்பது நன்று. இம்மாதம் மூன்றாவது வாரத்திற்குமேல் அரசு சார்ந்த சுபச்செய்திகள் உங்கள் மனதை தெளிவுறச் செய்யும்.
கடகம்
புனர்பூசம் 4-ஆம் பாதம்: ராகு சுபச்செலவுகளை முதல்வாரம் அதிகரிப் பார். பணம் சேமிக்கலாம் என்ற எந்தக் கனவுகளும் நிறைவேறாது. சூரியனும் நேசக்கரம் நீட்டமாட்டார். நான்கு நாட்கள் ஒருபொழுது சமையல் கூடத்தில் இருந்து உணவுண்ணுங்கள். வெள்ளி யிலான யானை உருவம் பூஜையறையில் இருப்பது நல்லது. பெற்ற தாயிடம் கடுஞ்சொல் கூடாது. மாதக் கடைசியில் சற்று நிலைகுலைந்து காணப்படுவீர்கள்; சூரிய ஸ்துதி நல்ல பலனைத் தரும். பூசம்: பொதுவில் இவர்களுக்கு தகுதியானதைவிட உயர்வான இடத்தில் வரன் அமையும். இல்லையென்றாலும் தடைப் பட்ட வேலை வாய்ப்புகள், சம்பள உயர்வுகள் கிடைக்கப் பெறும். திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய நாட்கள் கூடுதல் ஆதாயமாக இருக்கும். ஈஸ்வர வணக்கம் நிம்மதியைத்தரும். மூன்றாவது வாரம் தேவையற்ற விவகாரங் களில் தலையிடக்கூடாது. இரவில் ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தலைவைத்துத் தூங்கவும். ஆயில்யம்: செவ்வாயின் இருக்கை- அறுவைச் சிகிச்சை நிபுணர், பொறியாளர், தொழில்நுட்பம் சார்ந்தவர்களைப் பெருமை படச் செய்யும். உங்களுடைய கற்பனையும் செயல்களும் அற்புதத்தை நோக்கிச் செல்லும். இம்மாதம் பொது இடங்களில் நாய் துரத்திவந்தால் ஓடுவது கூடாது. ஊனமுற்ற நான்குகால் பிராணிகளுக்கு உதவி புரிவதால் கேதுவின் செயல் நன்மைக்கு வழிகாட்டும். வயதுக்கு வராத பெண் குழந்தைக்கு பொருளுதவி செய்தல் நன்று. திருமணத்தடை அகன்றுவிடும்.
சிம்மம்
மகம்: ராசிக்கு ஐந்தில் சனி, கேது, குரு இணைந்து, ஒரு தீர்வுக்கு வருவதில் அதிக காலதாமதத்தை ஏற்படுத்துவார்கள். மிகமுக்கிய கேள்விகளுக்கு விடைகிடைப்பது கடினமாகத் தெரியும். கடவுளை நம்பினார் கைவிடப்படார். கீழே தரப்பட்டிருக்கும் மந்திரத்தை உச்சரித்து தெளிவு பெறலாம். தினம் பத்துமுறை கூறவும். ப்ருக்ஷேபதத்த லக்ஷ்மீக: பர்கோ பத்ரோ பயாபஹ: பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பூதிபூஷண: பூரம்: கும்பத்தில் சூரியன், புதன். செல்வம் தானாகவே உங்களை மகிழ்ச்சிப் படுத்தாது. ஆனால் நீங்கள் புகுந்த வீட்டில் சொகுசான கார், பங்களா, உயரிய உடைகள், பண்ணை வீடு யாவற்றையும் எதிர்பார்க்கலாம். சனியின் சொந்த வீட்டில் சூரியன் இருப்பதால், 34 வயதைக் கடந்தவர்கள் இம்மாதம் நல்ல தெளிவு பெறலாம் என்கிறது ஜோதிடம். கருப்புநிறப் பசு அல்லது கொம்பில்லா பசுவுக்கு ஆகாரம் தருதல் நற்பலன் தரும். உத்திரம் 1-ஆம் பாதம்: நீங்கள் பிறந்ததுமுதலே எரிச்சல்களும் சச்சரவுகளும் அல்லலும் பட்டிருக்கலாம். அதையே நினைத்து வருந்தவேண்டாம். ராகுவுக்காக நீலநிற ஆடையைத் தவிர்த்துவிடுங்கள். வெள்ளி டம்ளரில் நீர் அருந்துதல் சிறப் பானது. நான்கு தேங்காய், நான்கு எலுமிச்சம் பழம், உடலிலுள்ள ரோமம் (மயிர்) ஆகிய வற்றை கறுப்புத்துணியில் முடிந்து, திருஷ்டி சுற்றி ஓடும்நீரில் போடுவதால் தடைகள் அகன்றுவிடும்.
கன்னி
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: மேஷத்தில் செவ்வாய். குடும்பத்தில் இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கிடைக் கப்பெறும். அமைதியாக உறங்கி ஆனந்தமாய் எழுந்திருக்க ராசிநாதர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஏதோ காரணத்திற்காக தாயார் பிரிந்திருந்தால், மனம் வருந்தி திரும்பிவர குருபகவான் துணைபுரிவார். விபத்தில் ஊனமுற்ற நான்குகால் பிராணிகளுக்கு உதவிபுரிவது உயரிய பலனைத்தரும். ஹஸ்தம்: பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கு டியூஷன், ஸ்பெஷல் கிளாஸ் என அவர்களை இம்மாதம் ஊக்குவிக்கவேண்டும். ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கவேண்டும். பங்குச்சந்தையில் முதிர்ந்த அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை பெற்று செயல்படவேண்டிய மாதம். நான்கு முகம் கொண்ட பிரம்ம ருத்திராட்சத்தை பாலில் ஊற வைத்துப் பருகலாம். மந்த புத்தியும் பளிச்சிடும். மார்பிலும் அணியலாம். சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: சூரியனும் புதனும் கும்பத்தில். பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், செய்தி சேகரிப்போர் பிறரின் சதிவலையில் சிக்க நேரிடும். சூரியனுக்காக நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் ஒருபொழுது உப்பு கலவா உணவுண்ணல் வேண்டும். அல்லது கால்கிலோ கோதுமை அல்வாவை ஞாயிறன்று தானமாகத் தருதல் நன்று. புதன்கிழமை ராகுகாலம் பகல் 12.00 மணிமுதல் 1.30 மணிவரை நீர் பருகுதல் கூடாது. பார்வையற்றோருக்கு உதவிபுரிதல் போதுமானது.
துலாம்
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: "நல்லவளாக இருப்பதைவிட அழகாக இருப்பது சிறந்தது என ஒவ்வொரு பெண்மணியும் விரும்புகிறாள்' என்பது ஜெர் மானிய பழமொழி. இம்மாதம் செவ்வாயும் சந்திரனும் உங்களை உற்சாகப்படுத்துவார்கள். ராகு புதன் வீட்டில் குருவின் நேரடிப் பார்வையில் இருப்பதால், அரசு சாராப் பணியாளர்கள் (என்.ஜி.ஓ.), அறநிலையத் துறையினர், கோவில்களைப் பராமரிப்போர் நீதிக்குப் புறம்பாக நடப்பது கூடாது. நான்கு செம்புவளையம், நான்கு செம்பருத்திப்பூவை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி நின்று, மனக்குறைகளை ஆண்ட வனிடம் முறையிட்டு நீர்நிலையில் போடவும். ஸ்வாதி: இம்மாதம் இரண்டாவது வாரம் சிரித்த முகத்துடன் உலாவரலாம். குழந்தைகளின் கவலை, அரசு சார்ந்த கவலை, நீண்டநாளைய ஆரோக்கியக் குறைபாடுகள் யாவும் சீர்செய்யப்படும். சுக்கி ரனுக்கு உரியதைக் கடைப்பிடிக்க வேண்டும், "கந்தையானாலும் கசக்கிக்கட்டு; கூழானாலும் குளித்துக்குடி' என்பார்கள். அதைக் கடைப்பிடித்தால், சுக்கிரன் பேரானந்தம் அடைவார். சுத்தம் சுகம் தரும். விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: நெடுநாளாகவே குடியிருக்க ஒரு வீடு இல்லையே என்ற ஏக்கம் இருந்தால், இம்மாதம் சனியும் குருவும் குறைகள் தீர்க்க உதவுவார்கள். காலணி அணியாமல் ஆலயம் சென்று சனி பகவானை வணங்குதல் நல்லது. மாணவர்கள் இம்மாதம் தன்னந்தனியாகப் பாடங்களைப் படித்தல் நன்று. கூட்டாகப் பயிலுவதைத் தவிர்த்தல் வேண்டும். ஐந்து செந்தாமரைப் பூக்களால் விநாயகருக்கு அர்ச்சனை, பூஜை செய்தல் நற்பலன் தரும்.
விருச்சிகம்
விசாகம் 4-ஆம் பாதம்: செவ்வாய் இம்மாதம் எதையும் உடனடியாகச் செய்யவேண்டும் என உணர்த்துவார். எனவே கவனத்தை எதிலும் சிதறவிடாமல் முடிப்பது நல்லது. மூன்றாவது வாரம் முக மலர்ச்சியுடன் தென்படலாம். ராகு புக்தி, ராகு தசை நடந்துகொண்டிருந்தால், ராகு காலத்தில் பண விவகாரத்தில் உஷாராக செயல்படவும். இரண்டு கோமேதகம்- குறைந்த விலை ராசிக்கல் வாங்கி திருஷ்டி சுற்றி ஒன்றை நீர்நிலையில் போடவும்; இன்னொன்றை பர்சில் வைப்பது நன்று. அனுஷம்: தம்பதியினர் தம் மனதிலிருக்கும் ஆழ்ந்த குற்றவுணர்வுகளை இம்மாதம் வெளிப்படுத்துதல் கூடாது. பெரிய வில்லங்கத்திற்கு வழிவகுத்துவிடும். மதுப்பிரியர்கள் இம்மாதம் அதை தவிர்ப்பது நல்லது. மஞ்சள் நிற உருளைக்கிழங்கினை பசுவுக்குக் கொடுப்பது நல்ல பரிகாரம். படித்த மேதாவிகளுக்கு, சிறந்த பேச்சாளர்களுக்கு, சூரியன் அருளால் பட்டம், பதவி கிடைக் கப்பெறும். "டர்மலின்' (பன்ழ்ம்ர்ப்ண்ய்) சிறிதாக என்ற ராசிக்கல் அணிதல் சிறப்பானது. கேட்டை: வெளிநாடு செல்வோருக்கு இம்மாதக் கடைசி வாரத்தில் பாஸ்போர்ட், விசா போன்றவற்றில் சிக்கல், தடைகள் வரலாம். குறிப்பாக உயர்கல்விக்கு செல்வோர், பெற்ற தாயின் பூரண சம்மதமும், ஆசிர்வாதமும் வாங்கிச்செல்வது நன்று. சாம்பல்நிற எருமைக்குப் புல் தருதல் நன்று. ஒரு சமச்சதுர வெள்ளி உலோகத்துண்டுடன், ஒரு சிறு முத்தையும் கைவசம் வைத்துக்கொள்வது லாபகரமானது.
தனுசு
மூலம்: கும்பத்தில் இருக்கும் சூரியன் உங்களை திசை திருப்ப முயலுவார். இம்மாதம் நிதானம் மிகமிகத் தேவை. குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் லாவகமாகப் பழகுதல் வேண்டும். மூன்றாவது வாரம் சில மாற்றங்களை உருப்படியாக நிறை வேற்ற ராகு சில தடைகளை ஏற்படுத்துவார். பூஜையறையில் சிறு வெள்ளிக்கிண்ணத்தில் தேனை நிரப்பி, குங்குமத்தை அதில் தூவி வைப்பது போதுமானது. செவ்வாய் சீர்செய்வார். பூராடம்: குழந்தைகளின் கல்விக்கான செலவினங்கள், பற்றாக்குறையை சீர்செய்ய வேண்டிய மாதம். இரண்டாவது வாரம் சிவப்புநிற முகம் கொண்ட ஆஞ்சனேயரை வணங்குதல் போதுமானது. இம்மாதம் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும். இனிப் பைப் பரிமாறுதல் நல்லது. அசையா சொத்துள்ளவார்கள் சனி பகவானை வணங் கினால் சுபல நன்மை கிடைக்கப்பெறும். உத்திராடம் 1-ஆம் பாதம்: கலைஞர்கள், எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்களை கும்பத்தில் சூரியனுடன் இருக்கும் புதன் தடைகளை ஏற்படுத்தி அரைகுறையாக முடிக்கச் செய்யும். நாடக நடிகர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஆண்கள்- பெண்களின் குற்றச்சாட்டிற்கு உட்படலாம். சரஸ்வதியை வணங்கவேண்டும். மஞ்சள் கரிசலாங்கண்ணி மாலைகட்டி பைரவருக்கு சாற்றி வழிபடல் நற்பலன்தரும்.
மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: ராசிக்கு 4-ல் செவ்வாய். பெண்கள் சிறுகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது கவனம் செலுத்த வேண்டும். இம்மாதம் பிறர் உபயோகித்த மின்சார உபகரணங்களை (செகண்ட் ஹேண்ட்) விலைகொடுத்து வாங்குதல் கூடாது. இரண்டாவது வாரம் பணம் கொடுக்கல்- வாங்கலிலில் உஷார் வேண்டும். ஆதிசிவனின் 64 அவதாரங்களில் மோட்சத்திற்கு அதிபதி காலபைரவரே. 80 வயதைக் கடந்தவர்கள் காலபைரவரை வணங்குதல் சிறப்பானது. திருவோணம்: பாட்டன், முப்பாட்டன், தந்தை- தாய் நல்ல நூல்களை விட்டுச்சென்றிருந்தால் இம்மாதம் அது மிக உதவியாக இருக்கும். இம்மாதம் இடமாற்றம், தொழில் மாற்றம் லாபகரமாக அமையும். திருமணமான ஆண்களுக்கு இன்னு மொரு பெண்ணுறவை ஏற்படுத்த கிரக நாதர்கள் வழிவகுப்பார்கள். தவிர்ப்பது நல்லது. இம்மாதம் எதையும் இலவசமாகப் பெறுவது கூடாது. தொழில் விருத்திபெற ஆரஞ்சுப்பழம் தானம் செய்யலாம். அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: வாஸ்துரீதியாக வடதிசை நோக்கிய குறுகிய தெருவில் இருப்பிடம் அமையும் வாய்ப்புள்ளது. உங்களுடைய பலவீனத்தை அறிந்து செயல்படவேண்டும். வீண்வம்பை விலைகொடுத்து வாங்குவது போன்ற நிலை, மாதத்தின் கடைசி நான்கு நாட்களில் அமையும். பொய்சாட்சி கூறல், புறங்கூறலைத் தவிர்ப்பது நன்று. வெள்ளைநிறப் பசு அல்லது நாய்க்கு உணவூட்டல் நல்ல பரிகாரம். கடைசி வாரம் வாசலில் உப்பு கலந்த நீர் தெளிப்பது நல்லது.
கும்பம்
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: சூரியனும் புதனும் ராசியிலேயே உள்ளனர். இம்மாதம் பெண்கள் கோல்ட் கவரிங், இமிடேஷன் நகைகள் அணிவதைத் தவிர்த்தல் நல்லது. கலைஞர்கள், பிறர் கற்பனையால் உருவானவற்றைக் காப்பியடித்து முன்னேற முயற்சிப்பது கூடாது. 60 வயதைக் கடந்தவர்கள் இம்மாதம் காசி, ராமேஸ்வரம், கயா, பூவளுர் போன்ற புண்ணியத்தலம் சென்று இறைவணக்கம் செய்வது நன்று. சதயம்: இம்மாதம் குருவை வணங்குவதன்மூலம் நல்ல மனைவி- கணவன் அமைவார். நல்ல இல்லறம் கிடைக்கப்பெறும். இம்மாதம் இடது காலில் கவனம் தேவை. தேய்பிறை அஷ்டமியில் பிறந்திருந்தால், வாகனங்களில் ஏறும்போதும், இறங்கும் போதும் உஷார்நிலையில் செயல்படவும். மூன்றாவது வாரம் பக்கத்து போர்ஷன், அடுத்துள்ள வீட்டிலுள்ளோரிடம் வீண்பகை நேரலாம். வாசலில் மூன்று ஊமத்தங் காயைக் கறுப்புநிற நூலில் கட்டித் தொங்கச் செய்யலாம். பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: நல்ல பேச்சுத்திறன் இருந்தும், புத்திலிசாலித்தனம் இருந்தும் பணம் சம்பாதிக்க இயலவில்லையே என்னும் கவலை விடைகொடுக்கும். பொதுநலத்துறை, வருமானவரித்துறை, துப்பறியும் துறை, கணக்குத் துறையினருக்கு ஏற்றமான மாதமாகத் திகமும். தடைகள் இருந்தால் குலதெய்வ சாபம் இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் நொச்சியிலை மாலை கட்டி பைரவருக்கு சாற்றி வழிபடலாம். கவலைகள் மறையும்.
மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம்: மாணவர் களுக்கு இறைவணக்கம் மிகுதியானால்தான் அதிக மதிப்பெண் பெறலாம். 12-ல் சூரியன், புதன். பினாமியாக நிலம், வீடு வாங்கி வைத்திருப்போர் ஒப்பந்தங்களை உறுதி செய்வது நன்று. வங்கியில் பணம்பெறும் போது நோட்டுக் கட்டின் எண்ணிக்கையை உடனேயே சரிபார்ப்பது நல்லது. தேர்தல் காலத்தில், பணப் பட்டுவாடாவில் உரியவரிடம் பணம் போகிறதா என்பதில் உன்னிப்பான கவலை தேவை. ஆயில்யம், சுவாதி, மிருகசீரிட நட்சத்திர நாட்களில் பைரவர் வழிபாடு நல்லது. உத்திரட்டாதி: இம்மாதம் சக தொழிலா ளர்களை குற்றங்குறை கூறிக்கொண்டிருப்பது கூடாது. கனரக வாகனம் ஓட்டுவோர், லேடர் போன்றவற்றை இயக்குவோர், எர்த்மூவர் ஓட்டுனர்கள் செயல்படும்போது கவனம் மிகமிக அவசியம். தேய்பிறை அஷ்டமியில் அகல்விளக்கில் பஞ்சதீபம் (நல்லெண்ணெய், இலுப்பையெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், நெய்) ஏற்றி வழிபடல் நன்று. தொல்லை நீங்கும். ரேவதி: அரசியல், பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு மாதத்தின் முதல் வாரம் தேவையற்ற நண்பர்கள் நேரத்தை வீணடிப்பர்; கடைசிவாரம் பிசியாகக் காணப்படுவீர்கள். சுக்கிரன் சனியின் வீட்டில் காணப்படுகிறார். நெறியற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் சூழ்நிலை நாடிவரும். சுக்கிரமகா தசையில் ராகு அல்லது சனி அந்தரத்தில் உஷார்நிலையில் செயல்படவும். கருங்குவளை மலரும், கருப்பு எள்ளும் கலந்து திருஷ்டிசுற்றி நீர்நிலையில் தூவிவிடல் நன்று.
செல்: 93801 73464